அமெரிக்காவின் தலையீடு முடிவுக்கு வரும் வரை, ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா எந்தவித இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டால், கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிராந்தியத்தில் உள்ள புதிய அமெரிக்கத் தளங்களும் இலக்காகக் கொள்ளப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை எச்சரித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பரிந்துரைத்த கடற்பாதையைப் பின்பற்றாமல் சென்றதாகக் கூறப்படும் மற்றொரு வர்த்தகக் கப்பல் மீது, எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஓமான் கடற்பரப்பை ஊடறுத்து அமெரிக்கா பரிந்துரைத்த பாதையில் பயணித்த மூன்று வர்த்தக எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதிலடி தாக்குதல்கள் இடம்பெற்றன.
அமெரிக்க தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்ததுடன், 115 பேர் காயமடைந்துள்ளனர்.
அதற்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகளின் இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் தாக்குதல்கள் காரணமாக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்காவே மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளைத் தொடரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், மத்தியஸ்த நாடுகள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.





