சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம்

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, 2026ஆம் ஆண்டை முன்னிட்டு சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி 2024இல் அறிவிக்கப்பட்டிருந்த கலியம், ஜெர்மேனியம், அன்டிமனி மற்றும் சூப்பர்-ஹார்ட் பொருள்கள் மீதான ஏற்றுமதித் தடை 2025 நவம்பர் 9 முதல் 2026 நவம்பர் 27 வரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பயன்பாட்டுக்குரிய கிராஃபைட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 9இல் அறிவிக்கப்பட்ட சில அரிய பூமி உலோகங்கள் மற்றும் லித்தியம் பேட்டரி பொருள்கள் மீதான கட்டுப்பாடுகளும் சீன அரசாங்கத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையேயான சமீபத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளைச் சீராக்குவதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.