முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தில் ஒருசிலர் பிரிவினை முயற்சிகள் ? – முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருசிலர் நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது. அதேநேரம் முஸ்லிம் தாதியர்கள் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியும் என்பதை அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம் தாதியர்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு ஐக்கியத்தை அமைத்துக்கொள்வதன் மூலமே நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னுக்கு கொண்டுசெல்ல முடியும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், அதனை சுமையாக நாங்கள் காண்பதாக இருந்தால், பன்முகத்தன்மையை ஐக்கியத்துக்கு தடையாக நாங்கள் பார்ப்போமானால் எங்களால் ஒருபோதும் ஒருநாடாக முன்னுக்கு செல்ல முடியாது. இது வரலாற்றில் பல தடவைகள் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் பெண் தாதியர்கள் (தலையை மறைத்து) அணியும் ஹிஜாப் புதிய விடயமல்ல. இலங்கையில் பல தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தே வேலை செய்கிறார்கள். அவ்வாறு எந்த தடையும் இல்லை. அதேபோன்று உயர் நீதிமன்றில் உள்ள பெண் சட்டத்தரணிகள் ஹிஜாப் அணிந்துகொண்டுதான் வழக்கு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அஞ்சான் உம்மா ஹிஜாப் அணிந்தே சபை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

அதேபோன்று உலக நாடுகளை எடுத்துக்கொண்டால், விசேடமாக அமெரிக்காவில் பொலிஸ் சேவைக்கு இணையும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துகொண்டு கடமைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஐராேப்பிய நாடுகள் பலவற்றில் இவ்வாறு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கடமைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது புதிய விடயமல்ல. அதனை அடிப்படையாகக்கொண்டு நாட்டுக்குள் மீண்டும் சந்தேகம், நம்பிக்கையில்லா தன்மை, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த ஒருசிலர் முயற்சிக்கின்றனர்.

அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் உறுதியாக செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் இது தொடர்பில் மெளனமாக இருந்து வந்தால், இறுதியில் அரசாங்கத்துக்கு அவர்களுக்கு முன்னால் மண்டியிட வேண்டி ஏற்படும். ஏனெனில் தற்போது சமுகவலைத்தலங்களில், இனவாத, மதவாத கருத்துக்கள், வெறுப்பூட்டும் பிரசாரங்கள், பிரிவினை வாதத்தை தூண்டும் கருத்துக்கள் பாரியளவில் பிரசாரமாகி வருகின்றன. குறிப்பாக அண்மையில் இஸ்ரேலுக்கு சென்றுவந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில், பலஸ்தீனுக்கு ஷாட்டர் விமானம் ஒன்றை அனுப்பி அங்கு இடம்பெயர்ந்து வாழ்பவர்களை,இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்து வருகிறார்.

இது கடந்த காலங்களில் போன்று இனங்களுக்கிடையில் வேறுப்பு, சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினையை தூண்டும் பேச்சாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களே இன்று அரசாங்கம் செய்கிறார்கள். ஆனால் இவற்றுக்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக அரசாங்கம் சட்டத்தை நிலை நாட்டுவதும் இல்லை.

அத்துடன் தாதியர் சேவையி்ல் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து சேவையில் ஈடுபட முடியும். அதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.அது நல்லவிடயம். அதனை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்துமாறே நாங்கள் தெரிவிக்கிறோம். அதனை சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்க வேண்டும்.

ஜேஆரின் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த நிஸ்ஸங்க விஜேரத்ன, முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசாரத்தின் பிரகாரம் பாடசாலை சீருடை அணிந்து செல்ல சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த சுற்று நிருபம் இன்றைக்கும் செல்லுபடியாகும். அதன் பிரகாரமே முஸ்லிம் மாணவிகள் பாடசாலை சீருடை அணிந்து செல்கிறார்கள். அதேபோன்று முஸ்லிம் தாதியர்களும் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியுமான வகையில் அதனை சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.