ஒருபுறத்தில் இனவாதத்தையும் மறுபுறத்தில் மதவாதத்தையும் தூண்டிக் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எந்தத் தரப்பினருக்கும் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கையர் தினத்துக்காகத் தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கவீந்திரன் கோடீஸ்வரன், காதர் மஸ்தான், துரைராசா ரவீகரன், பழனி திகாம்பரம், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இலங்கையர் தினம் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் இங்கு வினவப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளாலும் இந்த நிகழ்ச்சித் திட்டம் பெரிதும் பாராட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வகையில் நிகழ்ச்சிகளையும் செயற்றிட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.





