தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் அநுர சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பு நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்து, ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.

இனவாதத்தை ஒழிக்க, “இலங்கையர் தினத்தை” நடத்த, ஜனாதிபதி அநுர, எம்மை அழைத்து, எமது ஒத்துழைப்புக்களைக் கோரினார்.

எனது பதில் உரையில் நான் கூறியதாவது:-

“இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம்.”

“நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குச் சமாந்திரமாக, ‘இலங்கையர் அடையாளம்’ பேணி வளர்க்க பட வேண்டும்.”

“இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், ‘உரிமைகளின் சமத்துவம்’ இருக்க வேண்டும்.”

“இலங்கையர் தினக் கொண்டாட்டங்களின் போது, இலங்கையின் பல்வேறு இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக கலாசார ஊர்வலம் நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி முதலில் இலங்கையர் அறிந்துகொள்ள வழி செய்யுங்கள்.”

தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் என்னுடன் பழனி திகாம்பரம் எம்.பியும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தமிழ், முஸ்லிம் எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.” – என்றுள்ளது.