பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு !

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பொது நிதியில் ரூ. 1.03 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விரிவாகக் கூறப்பட்டுள்ளது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார்.

2010-2014 வரையான காலப்பகுதியில் பஷில் ராஜபக்ஷ உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, அதில் ‘மகா நெகும’ திட்டத்திலிருந்து ரூ. 155,451,612 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 வாகனங்களை அவர் பயன்படுத்தியதாகவும், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் மூன்று சொகுசு வாகனங்கள் மற்றும் 11 பிற வாகனங்கள் உட்பட, அரசுக்கு ரூ. 612,000,000 இழப்பு ஏற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 64 கடற்படை வீரர்கள் மற்றும் 84 ராணுவ வீரர்கள் அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டதாகவும், ரூ. 264,370ஈ 800 பொது நிதியில் அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விடயங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பொறுப்பான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார வலியுறுத்தியுள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்குரிய ஆவணங்களை கமந்த துஷார 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முன்னிலையாகி ஒப்படைத்துள்ளார்.