தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவின் போது பக்தர்களிடம் இருந்து திருடப்பட்ட 44 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்

தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டிணத்தில் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு நடந்த தசரா திருவிழாவின் போது பக்தர்களிடம் இருந்து 44 சவரன் நகைகள் திருடப்பட்டது. இது தொடர்பாக குலசேகரன்பட்டிணம் மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யபட்டு தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்தனர். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பக்தர்களிடம் இருந்து தஞ்சாவூரைச் சேர்ந்த சுகுணா என்பவர் 44 சவரன் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு போன 18 இருசக்கர வாகனங்கள் மீட்கபட்டுள்ளதாகவும், இதேபோல் தாளமுத்துநகர் மற்றும் நாலாட்டின்புதூர் காவல்நிலைய எல்கையில் நடைபெற்ற வழிப்பறியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குற்றவழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கண்காணிப்பாளர் மகேந்திரன் பாராட்டினார்