கிரண் பேடி பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவுவதையொட்டி கவர்னர் கிரண் பேடியே நேரடியாக களத்தில் இறங்கி சுகாதார பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.

புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்து வருகிறார். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு நடைபயணமும் மேற்கொண்டார்.

வீட்டையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், வீட்டுக்கு வெளியே தெருவில் குப்பைகளை கொட்டக்கூடாது, காலி மனைகளில் தண்ணீரை தேங்க விடக்கூடாது என கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தி வருகிறார்.

மேலும் ஒரு வார காலத்துக்கும் மேலாக வீடுகள் முன்பு குப்பைகளை கொட்டி தேக்கி வைத்தாலோ அல்லது காலி மனைகளில் குப்பைகளை கொட்டினாலோ அபராதம் விதிக்கப்படும் என்று கவர்னர் அறிவித்து இருந்தார்.

இந்த அபராத தொகை ரூ.100 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை முதலியார் பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். முதலியார் பேட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள வீதிகளில் கவர்னர் கிரண்பேடி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது பழனி என்பவரது வீட்டு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு சிதறி கிடந்தது.

இதனை பார்த்த கவர்னர் கிரண்பேடி அந்த வீட்டின் உரிமையாளரான பழனியை அழைத்து எச்சரித்தார். மேலும் உடன் சென்ற அதிகாரிகளிடம் தெருவில் குப்பை கொட்டிய பழனிக்கு அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து தெருவில் குப்பை கொட்டிய பழனிக்கு நகராட்சி அதி காரிகள் ரூ.100 அபராதம் விதித்து வசூலித்தனர்.