பஞ்சாப்: குருதாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் நாளை இடைதேர்தல்

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் பா.ஜ.க. பாராளுன்ற உறுப்பினராக இருந்த இந்தி நடிகர் வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இந்த தொகுதியில் அக்டோபர் 11-ம் தேதி இடைதேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்காக 1257 பகுதிகளில் 1781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 457 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாகவும், 83 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வினோத் கன்னா தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்ற இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க. நம்பிக்கை வைத்துள்ள அதேவேளையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் 77 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் தங்கள் வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என கருதுகின்றது. சட்டசபையில் 20 உறுப்பினர்களுடன் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியும் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில், நாளை காலை 8 மணியளவில் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வரும் 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் 7 ஆயிரம் போலீசார் மற்றும் 3 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.