இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 28 பேர் கைது

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. இவரது மூத்த மகன் நமல் ராஜபக்சே. இவர் எம்.பி. ஆக இருக்கிறார்.

இவர் ஹம்பந்தோட்டா நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்த முயன்றார். அங்கு தனது தந்தை ராஜபக்சேவின் பெயரில் இயங்கும் விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு மிக குறைந்த விலைக்கு விற்க இலங்கை அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி இப்போராட்டத்தை அறிவித்து இருந்தார்.

ஆனால் ஹம்பந் தோட்டாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்த இலங்கை அரசு தடை விதித்து இருந்தது. அதற்கு அனுமதி தரவில்லை. இருந்தும் அவர் தனது ஆதரவாளர்களை திரட்டி போராட்டம் நடத்த முயன்றார்.

முன்னதாக இந்திய தூதரகம் நோக்கி நமல் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஹம்பந்தோட்டா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 16-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஒரு பஸ்சில் அவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால் அந்த பஸ்சை செல்ல விடாமல் நமல் ஆதரவாளர்கள் ஹம்பந் தோட்டா பாலத்தில் டயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தினார்கள். உடனே அதிரடிப்படையினர் எரிந்த டயர்களை அகற்றி பஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

போராட்டம் நடத்த கோர்ட்டு விதித்த தடை உத்தரவை மீறியதாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் நமல் ராஜபக்சே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.